New Life To You

வெளிச்சம் உதித்தது!

“இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்;” (ஏசாயா 60:2) என்ற கர்த்தருடைய வார்த்தையின்படி, இன்றைக்கு இந்த உலகமெங்கும் மக்களுடைய வாழ்க்கையில் இருள் சூழ்ந்து வருகிறதைப் பார்க்கிறோம்.

யுத்தத்தினால் உண்டாகிற பாதிப்புகள் ஒரு பக்கம்! இயற்கைப் பேரழிவுகளினால் உண்டாகிற சேதங்கள் ஒரு பக்கம்! பஞ்சத்தினால் உண்டாகிற வேதனைகள் ஒரு பக்கம்! பொருளாதாரப் பாதிப்பினால் உண்டாகிற நஷ்டங்கள் ஒரு பக்கம்! கொள்ளை நோய்களினால் உண்டாகிற மரணங்கள் ஒரு பக்கம்!

“இனி இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியுமா?” என்கிற ஒரு பயமும், கலக்கமும் மனிதர்களை வாதித்துக் கொண்டிருக்கிறது.

“பாவங்களும், சாபங்களும், வியாதிகளும், வேதனைகளும், பிசாசின் கிரியைகளும் இருளாக சூழ்ந்து வருகிற இந்த உலகில், நான் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?” என்று எண்ணி, கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா?

கலங்காதீர்கள்! உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற
இருளை வெளிச்சமாக மாற்றத்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, இயேசுவாகிய வெளிச்சம் உலகில் உதித்தது!

அந்த நாளைத்தான், ‘கிறிஸ்துமஸ் நாள்!’ என்று சொல்லி, இன்றைக்கு உலகமே கொண்டாடுகிறது. ‘கிறிஸ்துமஸ்!’ என்றால், “இயேசுவாகிய வெளிச்சம் உலகில் உதித்த நாள்!” என்று அர்த்தம். அதாவது, ‘கிறிஸ்துமஸ் பண்டிகை!’ என்றால், வெளிச்சத்தின் பண்டிகை!

“… நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், …” (யோவான் 8:12) என்று இயேசு சொன்னார். அவர் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், வியாதியிலிருந்தும், பிசாசின் பிடியிலிருந்தும், மரண பயத்திலிருந்தும் மக்களை விடுதலையாக்கி, மகிழச் செய்தபடியினால்…, “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று …” (மத்தேயு 4:15) சொல்லி, ஜனங்கள் மகிழ்ந்தார்கள்.

அன்றைக்கு மாத்திரமல்ல, இன்றைக்கும் தங்கள் வாழ்வில் இருள் நீங்கி, வெளிச்சத்தைப் பெற்றுக் கொண்ட மக்களில் சிலர் சொல்வதைப் பாருங்கள்:

பாவ இருள் நீங்கிற்று!

சுமார் 38 வருடங்களாக குடிப் பழக்கத்திற்கும், சுமார் 52 வருடங்களாக வெற்றிலை- பாக்கு போடும் பழக்கத்திற்கும், புகைப் பழக்கத்திற்கும் அடிமையாக இருந்தேன். எவ்வளவோ முயற்சிகளைச் செய்தும், விடுதலை பெற முடியாத நிலைமையில், ‘ஜெபிக்கலாம் வாங்க!’ என்கிற நிகழ்ச்சியை ‘சத்தியம் டி.வி’-யில் பார்த்து, எனக்கு பாவத்திலிருந்து விடுதலை வேண்டுமென்று பிரார்த்தனை செய்தபோது, இயேசுவாகிய வெளிச்சம் என்னை தொட்டது. இயேசு என் பாவ இருளை நீக்கி, எல்லா பாவ அடிமைத்தனத்திலிருந்தும் எனக்கு முழு விடுதலையை கொடுத்தார். மைக்கேல்ராஜ், கல்லுவிளை (திலி).

சாப இருள் மாறிற்று!

நான் இயேசுவை அறியாத குடும்பத்தைச் சார்ந்தவன். எங்கள் குடும்பத்தில் பயங்கரமான சாபமும், மரண இருளும்தான் சூழ்ந்திருந்தது. குடும்பத்தில் சிலர் திடீர் திடீரென்று மரித்துப் போனார்கள். எந்தக் காரியத்தை எடுத்தாலும் தடை. எப்படித்தான் வாழ்வதென்று தெரியாத நிலையில், இயேசுவை குறித்துக் கேள்விப்பட்டு, ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தேன்.

இயேசு என் குடும்பத்தில் காணப்பட்ட சாப இருளை முறித்து, தடைகளை மாற்றி, என் குடும்பத்தை ஆசீர்வதித்தார். – ஜெய்குமார், உளுந்தூர்பேட்டை.

மரண (வியாதி) இருள் விலகிற்று!

என் 2வது மகளுக்கு (4 வயது) சிறுநீரில் அதிகமான இரத்தமும் கலந்து வெளியேறியது. டாக்டர்கள், “இது புற்று நோய். சிறுநீரகத்தை ஆபரேஷன் செய்து எடுக்கத்தான் வேண்டும். என்றாலும், பிழைப்பது கஷ்டம்.” என்று சொல்லி விட்டார்கள். டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலைமையில், அவளை நாலுமாவடி-தேவனுடைய கூடாரத்திற்குக் கொண்டு வந்து மிகுந்த கண்ணீரோடு ஜெபித்தேன். இயேசு என் மகளுடைய மரண இருளை நீக்கி, பூரண சுகத்தைக் கொடுத்தார். – சுதா, முன்னீர்பள்ளம் (திலி).

பிசாசின் இருள் அழிந்தது!

சுமார் 5 வருடங்களாக பிசாசின் ஆவியினால் பாதிக்கப்பட்டேன். வீடு முழுவதும் குட்டிச் சாத்தான்களாக நிறைந்துதான் இருக்கும். எத்தனையோ மந்திரவாதிகளைப் போய் பார்த்தும், விடுதலை கிடைக்கவில்லை. இரவும்-பகலுமாக அவைகள் செய்கிற சேஷ்டைகளை என்னால் தாங்க முடியாமல், படுத்த படுக்கையாகி விட்டேன். “தற்கொலை செய்து கொள்ளலாம்.” என்று கூட நினைத்தேன்.

இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டு, ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெபித்தபோது, இயேசுவின் வெளிச்சம் என்னைத் தொட்டது. எனக்குள் இருந்த அந்தப் பிசாசின் ஆவி என்னை விட்டு வெளியேறிப் போயிற்று. அந்த நாள்முதல், பிசாசின் இருள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, முழு விடுதலையோடு இருக்கிறேன்.- சத்யா, பெருமாள்புரம் (கன்னியாகுமரி).

பாருங்கள்; இயேசுவாகிய வெளிச்சம் வந்தபோது, இவர்களுடைய வாழ்க்கையில் இருள் நீங்கி, மகிழ்ச்சி உண்டானது. உங்களுக்கும் இந்த வெளிச்சம் தேவை! உங்கள் இருளான வாழ்க்கையை வெளிச்சமாக மாற்றி, உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற, இந்த இயேசுவாகிய வெளிச்சம் உங்களுக்குத் தேவை! உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே, அந்த மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்து!
(யோவான் 1:9).

இன்றைக்கு இந்த மெய்யான ஒளி உங்களை சந்திக்கிறது. இந்த ஒளிக்கு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இடம் கொடுத்தால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக பிரகாசிக்கும். வெளிச்சம் வந்து விட்டால், இருள் தானாக விலகிப் போய் விடும்.

இயேசுவாகிய வெளிச்சம் உங்கள் வாழ்க்கையில் வந்து விட்டால், உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற பாவம், சாபம், வியாதி, பயம், கலக்கம் என்கிற இருள் எல்லாம் தானாகவே மறைந்து போய் விடும்.
நம்முடைய வாழ்க்கையை வெளிச்சமாக்க, இயேசு சிலுவையில் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி மரித்து, தாம் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்!

உங்களுக்கு ஒரு ஒளி மயமான எதிர்காலத்தைக் கொடுக்க, இந்த வெளிச்சமாகிய இயேசு இன்றைக்கு, இப்பொழுது உங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அந்த வெளிச்சம் உங்கள் வாசற்படியில் வந்திருக்கிறது.
உங்கள் வாழ்க்கையின் இருதயக் கதவை நீங்கள் திறந்து கொடுத்தால், உங்கள் வாழ்க்கை வெளிச்சமாகும்!

English
Scroll to Top