New Life To You

சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?


முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒரு மனிதன் அங்கே படுத்திருந்தான். இந்த மனிதனுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாய் இருந்தது. மனிதனைக் குறித்து ஆராயும்போது, முதலாவது, இவன் நெடுநாள் வியாதியுள்ளவனாய் இருந்தான். ஒன்று, இரண்டு வருடங்களல்ல, முப்பத்தெட்டு வருடம் படுக்கையில் கிடந்து இவனது உறுப்புகள் செயலற்றுப் போயிருந்தன.
இரண்டாவதாக இந்த மனிதன் உதவியற்றவனாயிருந்தான். இவனை ஆரம்பத்தில் கவனித்து வந்தவர்கள் இவனுக்கு உதவி செய்து சலித்துப் போனார்கள். இப்பொழுது உதவிசெய்ய யாரும் முன் வரவில்லை. வேளா வேளைக்கு உணவு கொடுத்து கவனிக்க யாருமில்லை. மூன்றாவதாக நம்பிக்கையற்றவனாயிருந்தான். ஆரம்பத்தில் இந்த வியாதி சுகமாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்பொழுதோ முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்து விட்டது. "இனி யார் தான் என்னை சுகப்படுத்தப் போகிறார்கள்?நான் சாகும்வரை இதே படுக்கையில்தான் சாக வேண்டும்” என்று வாழ்க்கையில் நம்பிக்கையற்ற நிலையில் இந்த மனிதன் இருந்தான்.
இப்படி இந்த மனிதன் நெடுநாளாய் வியாதிப்பட்டு, உதவியற்றவனாக, நம்பிக்கையிழந்து படுத்திருக்கும்போது, ஒரு அதிசயமான கேள்வியைக் கேட்டார். சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்பதே அக்கேள்வி. சுகத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த மனிதன் இந்த வார்த்தைகளைக் கேட்டு உடனே, மிகுந்த ஆச்சரியப்பட்டு, என்னை அன்போடு விசாரிக்கும் இவர் யார்? என்று அவரை நோக்கிப் பார்த்தான். மன உருக்கமுள்ளவராக, கண்களில் அன்பு கனிந்தவராக இயேசு கிறிஸ்து அவனையே நோக்கிக் கொண்டிருந்தார். அவன் தன்னுடைய உதவியற்ற நிலைமையை இயேசுவுக்கு எடுத்துச் சொன்னான்.


இயேசு அவனை நோக்கி "எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்றார். உடனே அந்த மனிதன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து போனான். (யோவான் 5:9)
இதை வாசிக்கும் அருமை சகோதரனே ! சகோதரியே! ஒரு வேளை நீயும் இந்த வியாதியஸ்தனைப் போல் நெடு நாட்களாக வியாதிப்பட்டு படுக்கையில் இருக்கலாம். "எனக்கு உதவி செய்ய யாருமில்லை. நான் தனிமையாக கஷ்டப்படுகிறேன்” என்று கலங்கிக் கொண்டு இருக்கலாம். பயப்படாதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக தனிமையில் கிடந்த மனிதனைத் தேடி வந்த இயேசு கிறிஸ்து இன்று உன்னைத் தேடி வந்திருக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறவர். அன்போடு விசாரிக்கிறவர். காரணம் அவரே உன்னை உண்டாக்கினவர்.
"டாக்டர்கள் என்னை கைவிட்டார்கள், மருந்துகளாலும் பிரயோஜனமில்லை, நான் வாழப்போவது உறுதியில்லை” என்று நம்பிக்கையிழந்து கலங்கிக் கொண்டிருக்கிறாயா? கலங்காதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக சுகமாகாத வியாதிக்காரனை "எழுந்து நட" என்ற ஒரே சொல்லால் சுகப்படுத்தின இயேசு கிறிஸ்து உன் வியாதியை சுகப்படுத்துவது அதிக நிச்சயம். ஏனென்றால் “இயேசு கிறிஸ்து தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை (சிலுவையில்) சுமந்தார்.” (மத்தேயு 8:17) இயேசு கிறிஸ்து உன் பலவீனங்களையும், நோய்களையும் சுமந்து தீர்த்துவிட்ட படியினால் அவர் உன்னைச் சுகமாக்க வல்லவராயிருக்கிறார்.


இந்த இயேசுகிறிஸ்து இப்போது உன்னைத் தேடி வந்திருக்கிறார். சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்று உன்னைப் பார்த்து கேட்கிறார். ஆனால் உன் வியாதிக்காக இயேசுவை நோக்கிப் பார்க்கும் முன்பாக ஒரு முக்கியமான காரியத்தை நீ செய்ய வேண்டும். உன் பாவங்களை மன்னிக்கும் படியாக சுகமாக்கும் இயேசுவை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால்... சுகத்தைப் பெற்றுக் கொண்ட இந்த வியாதியஸ்தனை இயேசு தேவாலயத்தில் கண்ட போது "இதோ நீ சொஸ்தமானாய் அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே என்றார். (யோவான் 5:14) இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தையிலிருந்து, இந்த மனிதனுடைய பாவமே இவனுடைய வியாதிக்கு காரணமாயிருந்தது என்பதை அறிகிறோம்.


அருமையான சகோதரனே, சகோதரியே உன்னுடைய வியாதிக்குக் கூட உன் பாவமே காரணமாயிருக்கலாம். ஆகவே உன் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவுக்கு உன் உள்ளத்தில் இடம் கொடு. தன்னிடத்தில் வந்த எந்த பாவியையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை.
இயேசுகிறிஸ்து உன் பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பதை விசுவாசி "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது.” (ஏசாயா 53:5)"இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்." (யோவான்1:7)
(I John 1:7)


“இயேசுவே என் பாவங்களை மன்னியும்” என்று இருதய கதவைத் திறந்து கொடு, அப்பொழுது அவர் உன் இருதயத்தில் வருவார், உன் பாவங்களை மன்னிப்பார். உன் வியாதிகளை குணமாக்குவார். தெய்வீக சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் உன் உள்ளத்தை நிரப்புவார். "இதோ வாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்” இயேசு (வெளி. 3:20)


உன் இருதய கதவை தட்டிக் கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்து "சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?" என்று இப்பொழுது உன்னை கேட்கிறார். அவருக்கு உன் இருதய கதவைத் திறந்து கொடுத்து, இந்த வியாதியஸ்தனைப் போல நீயும் உன் நிலைமையை இயேசுவிடம் சொல், நான் அனுபவிக்கும் இந்த வியாதிக்கு காரணமான என் பாவங்களையும் நீர் எனக்காக சிலுவையில் சுமந்தீரே! ஆகவே என் பாவங்களை மன்னித்து என் வியாதியிலிருந்து சுகம் தாரும் என்று கேள். நிச்சயமாக உன்னைச் இயேசுகிறிஸ்து சுகப்படுத்துவார். "
அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5)
இயேசு கிறிஸ்து அவருடைய தழும்புகளால் தொட்டு உன்னை சுகப்படுத்துவாராக.
இந்த இயேசுகிறிஸ்துவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால், எங்களுக்கு எழுதுங்கள். இயேசுவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுவிசேஷப் புத்தகத்தை உங்களுக்கு இலவசமாக அனுப்பி வைப்போம்.

Tamil
Scroll to Top