New Life To You

பயப்படாதிருங்கள்

உங்கள் உள்ளத்திற்குள் ஏதோ ஒரு காரியத்தைக் குறித்த பயம், உங்களை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது! வியாதியின் நிமித்தமாக உண்டான பயம்! பொல்லாத மனிதர்களைக் குறித்த பயம்! பிசாசு, அல்லது பில்லி-சூனியத்தைக் குறித்த பயம்! எதிர்காலத்தைக் குறித்த பயம்! மரண பயம்! கடன் பிரச்சனையினால் பயம்! தேவைகளைக் குறித்த பயம்!

இப்படி ஏதோ ஒரு காரியத்தைக் குறித்த பயம், உங்கள் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கிறது. சிலருக்கு காரணமே இல்லாத பயம்! இதனால், இரவிலே நிம்மதியான தூக்கமில்லை!

கண்களை மூடினால் பயப்படுத்துகிற காட்சிகள்! தூங்கினால் பயமுறுத்துகிற சொப்பனங்கள்! இவைகளை வெளியே சொல்லவே பயம்! "பயந்து, பயந்து தினம் தினம் சாவதை விட, செத்துப் போய் விடலாமா?” என்று தோன்றுகிறது!

இப்படித்தான் நீங்கள் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களைப் பார்த்து ஒருவர் சொல்கிறார்: “உங்கள் இருதயம் பயப்படாமலும் கலங்காமலும் இருப்பதாக.'' (யோவான் 14:27).

இதை வாசிக்கிற உங்களுக்குத்தான் சொல்கிறார்: “என் மகனே, நீ பயப்படாதே! என் மகளே, நீ பயப்படாதே!

சொல்கிறவர் யார் தெரியுமா?

வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய, சர்வ வல்லமையும் உள்ளவர்!

பாவத்தையும், உலகத்தையும், பிசாசையும், மரணத்தையும் ஜெயித்தவர்!

பாவத்தையும், உலகத்தையும், பிசாசையும், மரணத்தையும் ஜெயித்தவர்!

“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்." (ஏசாயா 41:10,13). பயம், உங்கள் சந்தோஷத்தை கெடுத்து விடும்! பயம், உங்கள் தூக்கத்தைக் கெடுத்து விடும்! பயம், உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும்! பயம், உங்களை வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கும்! இந்த பயத்திலிருந்து உங்களுக்கு ஒரு விடுதலை தேவை. இந்த விடுதலையை உங்களுக்கு தருவதற்காகத்தான், நம்மை உண்டாக்கிய கடவுள் இயேசு கிறிஸ்துவாக இந்த உலகில் அவதரித்தார்.

நம்மை, 'பாவம்', 'சாபம்', 'பிசாசு', 'மரணம்' என்கிற பயத்தின் வல்லமையிலிருந்து விடுதலையாக்கத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி மரிக்க தன்னையே ஒப்புக் கொடுத்தார். மரித்த இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார்!

''மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்," (வெளி. 1:18) என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முழங்கினார்! இந்த உலகத்தையும், பிசாசையும், மரணத்தையும் ஜெயித்து உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பயந்து கொண்டிருந்த மக்களை சந்தித்து, “உங்களுக்கு சமாதானம்!" என்று சொல்லி, அவர்களுடைய பயத்தை மாற்றி, அவர்களை சந்தோஷப்படுத்தினார்!

இந்த இயேசு கிறிஸ்து உங்கள் பயத்தையும் மாற்றி, உங்களையும் சந்தோஷப்படுத்துவார்! உங்களை பயப்படுத்திக் கொண்டிருக்கிற காரியத்தில், உங்களுக்கு அற்புதம் செய்து, உங்களை மகிழச் செய்வார்!

என் வாலிப வயதில் நான் வியாதிப்பட்டு, மரணப் படுக்கையில் இருந்தேன்! என்னால் நடக்கக் கூட முடியாமல், படுக்கையில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். எல்லா மருத்துவர்களும் என்னை கைவிட்டபடியினால், மரண பயம் என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. என் குடும்பத்திலுள்ள எல்லோரும் பயத்தினால், சந்தோஷத்தை இழந்து விட்டார்கள். “என்ன நடக்குமோ?" என்று பயந்து கொண்டிருந்தபோது, மரணத்தை ஜெயித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை சந்தித்து, என்னை தொட்டு குணமாக்கினார்! என்னுடைய பயம் சந்தோஷமாக மாறியது! என் குடும்பத்தில் காணப்பட்ட துக்கமெல்லாம் சந்தோஷமாக மாறியது!

இந்த இயேசு கிறிஸ்துவை என் உள்ளத்தில் நான் ஏற்றுக் கொண்டபடியினால், என் பாவங்கள் எல்லாம் ஓடி மறைந்து போயிற்று! என் வாழ்க்கையில் என்னை பயப்படுத்துகிற எத்தனையோ காரியங்கள் வந்த போதிலும், அதைக் கண்டு நான் பயப்படாமல் வாழ்கிற மகிழ்ச்சியான வாழ்க்கையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்கு தந்திருக்கிறார். மரணத்தைக் குறித்த பயமும் என்னை தொடுவதில்லை!

இந்த இயேசு கிறிஸ்துவை உங்கள் உள்ளத்தில் நீங்கள் ஏற்றுக் கொண்டால், உங்கள் பயம் எல்லாம் ஓடி மறைந்துவிடும்!

"எனக்காக சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவே, என் பாவங்களை மன்னியும்! என் உள்ளத்தில் வாரும்! என் பயத்திலிருந்து எனக்கு விடுதலை தாரும்!" என்று அவரிடத்தில் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பயம் சந்தோஷமாக மாறும்!

ஒரு தகப்பன் தன் பிள்ளையை கரம்பிடித்து நடத்துவது போல ஆண்டவர் இயேசு உங்களை கரம் பிடித்து நடத்துவார்.

Tamil
Scroll to Top